Wednesday, August 25, 2021

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தள்ளிவழங்குவது ஏன்? பகுதி-1

ஒன்றிய அரசு அகவிலைப்படி வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், மாநில அரசும் வெளியிடும் என பணியாளர்களும், ஓய்வூதியர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மேலும் காலதாமதம் ஆகும் என்ற அறிவிப்பு, அவர்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கால தாமதத்திற்கான விளக்கத்தினை நிதி அமைச்சர் அவர் வளர்ந்துவந்த வர்க்க உணர்வுடன் அறிவித்து விட்டார். சொல்லுகின்ற மொழியில் பாசாங்குத்தனம் கலக்காமல் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டார். இன்று தமிழ்நாட்டில் இது தொடர்பான காரசாரமான விவாதங்கள், அவரின் கூற்றை ஒட்டி வெட்டி, சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறது.

மதுரையில் நண்பரின் இல்ல விழாவிற்கு, இரட்டை மனதுடன் கலந்துகொண்டேன், (கொரானா பெரும்தொற்று காரணம்) விழாவில் அவரின் உறவினர் ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் அருகில் அமர்ந்து இருந்தார். நலம்விசாரிப்புக்கு பின்னால் நிதியமைச்சரின் அறிவிப்பு பற்றி பேசத்தொடங்கினார் என்பதை காட்டிலும் கேள்வி கணைகளை தொடுத்தார் என்பதே சரியாகும். 

தற்போது ஆட்சியில் உள்ள ஒன்றிய அரசு மேற்கொண்ட அரசியல், பொருளாதார நடவடிக்கையினால் சிறு மட்டும் குறு நிலைப்பட்ட தொழில்கள் முடங்கியதால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிர்கதியாக தெருவில் குடும்பத்துடன் அலைந்தபோது உங்களின் நிலை என்னவாக இருந்தது. உங்களுக்கான சமூக பாதுகாப்புடன் குறைந்தபட்ச தேவைகளை சிரமமின்றி பூர்த்தி செய்து கொண்டீர்கள். 

பெட்ரோல் டீஸல் விலை உயர்வினால் அனைத்து பொருள்களும் விலையேற்றம் பெற்று ஒரு வேளை சோற்றுக்கே திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டபோது நீங்கள் வழக்கம்போல் குறைந்த பாதிப்புடன் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தீர்கள். இதற்கும் மேலாக பெரும்தொற்று காலத்தில் லாக்டவுன் என்ற பெயரில் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஏராளம். உண்ண உணவும் தண்ணீரும் இல்லாமல் பல்லாயிரம் கிலோமீட்டர் நடைபயணமாக வறியோர், முதியோர், குழந்தைகள் பெண்கள், ஊனமுற்றோர் நடந்து,வழியில் பலர் மடிந்து,பரிதவித்தபோது பாதுகாப்புடன் லாக்டவுனை கடந்தீர்கள். இரண்டாவது தொற்று முனைப்புடன் தாக்கி எங்களை கபளிகரம் செய்தபோது அதுபற்றி எவ்வித சிந்தனையின்றி சமூக உணர்வின்றி கடந்து சென்றீர்கள். 

பெருந்தொற்று, வேலையிழப்பு பசி பட்டினி என்று நாங்கள் உழன்று கொண்டு இருந்தபோது, வேலைக்கே செல்லாமல் லட்சத்தில் ஊதியம் பெற்றுவந்த ஆசிரியப் பெருமக்கள் நீதிமன்ற பாதுகாப்பினை பெற்று நெருக்கடி நிலையில் குறுகிய காலத்திற்கு( மீண்டும் வழக்கமாக பள்ளிகள் செயல்படும் வரை) மேற்கொள்ளலாம் என்று முயற்சித்த ஊதியக்குறைப்பை தடுத்து நிறுத்தினர். 
-தொடரும்....

Monday, August 23, 2021

வரி வருவாயில் எங்களது பங்குதான் எவ்வளவு?

 இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாடு மக்கள் தங்களுக்கு தேவை ஒரு மாற்றம் என சிந்தித்து தேர்தலில் வாக்களித்தார்கள். திராவிட முன்னேற்ற கழகமும் சிறப்பான வெற்றியை பெற்று ஆட்சியிலும் அமர்ந்தார்கள். பதவியேற்ற நாளில் பெறுந்தொற்று மக்களை மிரட்டிக்கொண்டு முன்னேறியது. அனைத்து முயற்சிகளால் அதை முறியடித்து வெற்றிகண்டது அரசு. அதை தொடர்ந்து மெலும் பல நற்திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நற்பெயரினை ஈட்டியுள்ளது. 

இவ்வரசின் தேர்தல் அறிக்கையில் அரசுப்பணியாளர்களின் அகவிலைப்படி மற்றும் பழைய ஓய்வு ஊதிய மாற்றம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிக்கைகள் மறுக்கப்படும் நிலை அப்பகுதியினரிடம் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது. அவர்களுடன் இணைந்த ஓய்வூதியர்களின் நிலை கவலை அளிக்கும்படி உள்ளது. தமிழ் நாடு நிதியமைச்சர் அரசின் வருவாயில் ரூபாய் ஒன்றுக்கு, அரசுப்பணியாளர் ஊதியம் மற்றும் இதர செலவினமாக 60பைசா           (ரூ1க்கு 60பைசா) எனப்பேட்டியளித்துள்ளார். கடந்த காலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகளும் பேட்டிகளும் வெளியிடப்பட்டுள்ளதை இந்நாடு நன்கறியும். 

அப்படியானால் வாழ்நாள் அனைத்தையும் அரசுக்கும், மக்களுக்குமாக செலவிட்ட அரசுப்பணியாளர், மற்றும் ஓய்வுதியர் ஆகியோருக்கு மக்கள் அளிக்கும் வரியில்  என்ன பங்கு என்பதையாவது சொல்லிவிடுங்களேன்.

இப்படிக்கு ஏமாற்றத்துடனும், எதிர்பார்ப்புடனும் உள்ள அரசு பணியாளர்கள்